தமிழகத்தின் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

2020-21ம் ஆண்டுக்கான கல்வியாண்டு ஜூன் மாதத்தில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக பள்ளிகளை இன்னும் திறக்க முடியவில்லை. ஆனால், ஜூன் மாதம் தொடங்கியது முதலே தனியார் மெட்ரிக் பள்ளிகளும் சிபிஎஸ்இ பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கிவிட்டன. பல பள்ளிகளில் மழலையர் வகுப்புகளுக்குக்கூட ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு பெற்றோர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.


இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த சரண்யா என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவருடைய மனுவில், “தமிழகத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர்கள் உள்ளன. தற்போது டிஜிட்டல் முறையில் பாடம் நடத்தப்படுவதால் நகர்புற, கிராமப்புற, ஏழை, பணக்கார மாணவர்களுக்கு இடையே சமநிலையற்ற நிலை உருவாகியுள்ளது. முறையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால், மாணவர்களும், ஆசிரியர்களும் சவால்களை சந்திக்கின்றனர். எனவே, ஆன்லைன் வகுப்புகளுக்கு  தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பலரும் வலியுறுத்திய பிறகு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது திக, பாமக ஆகிய கட்சிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.