சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவர் சொந்தமாக கார் வைத்திருக்கிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் நந்தினிக்கு காவல் நிலையத்தில் இருந்து தகவல் ஒன்று வந்திருக்கிறது.

அதில் அவர் ஹெல்மெட் அணியாமல் சாலையில் சென்றதாகவும், வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அவருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கபடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதை பார்த்து நந்தினி அதிர்ச்சி அடைந்தார். அதற்கு காரணம் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பட்ட வாகனத்தின் பதிவு எண் அவரின் காரின் எண்ணாகும். காரில் சென்றத்துக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதிக்கப்பட்டது குறித்து நந்தினி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர், கடந்த மாதம் 25 ம் தேதி தனக்கு எஸ்.எம்.எஸ் தகவலில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு 100 அபராதம் விதிக்கப்பட்டதாக கூறி காரின் பதிவு எண் இணைக்கப்பட்டிருந்ததாக கூறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து யானைக்கவுனி காவல்நிலையத்தில் கூறியபோது விசாரணை நடத்துவதாக கூறியவர்கள் மீண்டும் அதே போன்ற தகவலை தபால் மூலமாக அனுப்பினர். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று நந்தினி தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.

இது சம்பந்தமாக கூறிய காவல்துறை அதிகாரி ஒருவர் செல்போன் மூலம் எடுக்கப்பட்ட படத்தில் வாகன பதிவெண் சரியாக தெரியாததால் தவறு நடந்ததாகவும், இது சம்பந்தமாக போக்குவரத்துக்கு போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.