காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு ஐ.டி. ஊழியர்கள் பயணித்த கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐ.டி. பெண் ஊழியர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சென்னை பள்ளிக்கரணை சங்கம் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (24). இவர், தனது நண்பர்களான மதுரை கே.புரத்தை சேர்ந்த தாமோதரன் (25), பேரையூர் தாலுகாவை சேர்ந்த ராகவி (23), ஈரோடு, சிதம்பரம் செட்டியார் காலனியை சேர்ந்த திவ்யதர்ஷினி (27) ஆகியோருடன் சேர்ந்து, காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு, நேற்று அதிகாலை சென்னை நோக்கி ஹூண்டாய் ஐ-20 காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். 

தாமோதரன் காரை ஓட்டினார். வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் கீழ்படப்பை அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி வேகமாக கார் மீது மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்த ராகவி, திவ்யதர்ஷினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  

காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த விக்னேஷ் மற்றும் காரை ஓட்டி வந்த தாமோதரன் ஆகியோர் பலத்த படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த 2 இளைஞர்களை மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 பெண்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய லாரி குறித்து அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த 4 பேரும், சென்னை சிறுசேரியில் உள்ள தனியார், ஐ.டி., நிறுவனத்தில், ஒன்றாக பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.