தன் வாழ்நாள் முழுவதையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு அர்ப்பணித்தவர் மருத்துவர் சாந்தா வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா (93). இவர் ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.  மேலும் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப்புகழ் பெற்றவர் சாந்தா.  அவர் தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்ம விபூஷண் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளை அவர் பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைக்கும் பணம் முழுவதையும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சிக்கே செலவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்: புற்றுநோய் சிகிச்சை அளிக்க பாடுபட்ட டாக்டர் சாந்தா நினைவு கூரப்படுவார். அடையாறு புற்றுநோய் நிறுவனம் ஏழை, எளியோர்க்கு சேவை செய்வதில் முன்னணியில் உள்ளது. சாந்த மறைவு கவலையளிக்கிறது. அவது ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.