தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியனர். இந்த தடியடிக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும், சட்டப்பேரவையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்ற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றனர். இதில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வருடன் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.