சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ் நிறுத்தத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று நேற்று திருநெல்வேலி நோக்கி இரவு 8.20 மணியளவில் கிளம்பியது . படுக்கை வசதியுடன் கூடிய விரைவு பேருந்து என்பதால் சீக்கிரம் ஊருக்கு சென்று விடலாம் என்று நினைத்து அதில் பயணிகள் பயணம் செய்தனர் .

பேருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடியை கடந்து இரவு 10 மணியளவில் சென்று கொண்டிருந்தது . அப்போது குறுக்கே ஒரு கார் சாலையை கடக்க முயன்றிருக்கிறது . காரின் மீது மோதாமல் இருக்க பேருந்தை சாலை ஓரமாக ஓட்டுநர் திருப்பிய போது அங்கே இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் மீது பேருந்து மோதியது .அதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .

உடனடியாக ஓட்டுநர் பேருந்தில் இருந்து இறங்கி ஓடி விட்டார் . இதனால் பயணிகள் பாதி வழியில் செய்வதறியாது திகைத்தனர் . பேருந்தில் பயணம் செய்த பயணிகள் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் . சம்பவ  இடத்திற்கு வந்த காவல்துறையினர் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . மேலும் தப்பியோடிய ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து  தேடி வருகின்றனர் .

மாற்று பேருந்து ஏற்பாடு செய்ய கோரி பயணிகள் பேருந்து நிர்வாகத்திடம் கூறினார் . உடனடியாக மாற்று பேருந்தை அனுப்புவதாக நிர்வாகம் கூறியிருக்கிறது . ஆனால் நள்ளிரவு கடந்தும் பேருந்து வராததால் பெண்கள் , குழந்தைகள் என நடுவழியில் பயணிகள் பரிதவித்தனர் . காவல் துறையும் முறையான நடவடிக்கை எடுக்காததால் அந்த வழியாக வந்த மற்ற பேருந்துகளில் ஏறி பயணிகள் ஊருக்குச் சென்றனர் . 

விபத்து நடந்த பிறகு மாற்று பேருந்தை அனுப்பாதது குறித்து அதிருப்தி தெரிவித்த பயணிகள் , சம்பந்தப்பட்ட பேருந்து நிர்வாத்தின் மீது காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர் .