சார்ஜ் போடும்போது, பேட்டரி பைக் திடீரென வெடித்தது. இதில் பைக் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மாங்காடு, அம்பாள் நகர், குபேரன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(32). அதே பகுதியில் வாகன பேட்டரிகளை சர்வீஸ் செய்யும் கடை நடத்துகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் மணிகண்டன், மின்சாரத்தால் இயங்கும் பேட்டரி பைக் ஒன்றை வாங்கினார்.

இந்நிலையில் மணிகண்டன், தனது பேட்டரி பைக்கை, வீட்டின் முன் நிறுத்தி சார்ஜ் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த பைக் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. இந்த சத்தம் கேட்டதும் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். உடனே, அங்கு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயன்றனர். ஆனால் முடியவில்லை.

தகவலறிந்து பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்தனர். அதற்குள், அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர். இதில், பேட்டரி பைக் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தால் அருகில் உள்ள வீடுகளின் சுவர்கள் அனைத்தும் புகை படிந்து கருமையாக காட்சியளித்தது. மேலும் வீட்டில் இருந்த மின்சார வயர்கள், சுவிட்ச் பாக்ஸ் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின.

புகாரின்படி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா, மர்மநபர்கள் தீ வைத்து சென்றார்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.