மும்பை-அகமதாபாத்தை தொடர்ந்து டெல்லி, கொல்கத்தாவுக்கு புல்லட் ரயில் இயக்குவது தொடர்பாக மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

மும்பையில் இருந்து குஜராத்தின் அகமதாபாத்துக்கு புல்லட் ரயில் இயக்கவதற்கான திட்டப்பணிகள் தொடங்கியுள்ளன. இந்த திட்டப்பணி வரும் 2023ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் ரயில்வேத்துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:-

மும்பை- அகமதாபாத்தை தொடர்ந்து மற்ற நகரங்களுக்கும் புல்லட் ரயில் இயக்குவதற்கான முழு ஆய்வு நடைபெற்றுவருகிறது. இது தொடர்பான அறிக்கை பெறப்பட்டதும் புல்லட் ரயில் டெல்லி-கொல்கத்தா, டெல்லி- மும்பை இடையே மற்றும் பிற நகரங்கள் இடையே இயக்க தீர்மானித்துள்ளோம்.

அகமதாபாத் மும்பை இடையே இயக்கப்பட உள்ள புல்லட் ரயில் 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி செலவில்விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப வசதியுடன் இந்த ரயில் இயக்கப்படும். கடந்த ஜூன் மாதம் வரையிலான காலத்தில் இந்த புல்லட் ரயில் திட்டத்துக்கு ரூ.3226.8 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மற்றொரு துணைக்கேள்விக்கு பதில் அளித்த அங்காடி கூறியதாவது: இந்த புல்லட் ரயில் மூலம் சராசரியாக 36,000 பேர் பயணம் செய்யமுடியும். இதற்கான குறைந்த பட்ச பயணக்கட்டணம் ரூ.3000 மாக இருக்கும். குஜராத்தில் இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு 97 சதவீத விவசாயிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

காராஷ்டிராவில் சில பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியில் சிக்கல் நிலவுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணி மாநில அரசுடன் தொடர்புடையது. புல்லட் ரயில் தண்டவாளம் உயரமான பகுதியில் தான் அமைக்கப்படும். 21 கிமீ தூரம் மட்டும் சுரங்கப்பாதையில் தண்டவாளம் அமையும். இதில் 7 கிமீ கடலுக்கு அடியில் அமையும். இளைய தலைமுறையினர் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்தே இந்த ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 40 ஆண்டுக்கு முன்பே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.