மும்பை- ஆமதாபாத் இடையே நாட்டின் முதலாவது புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் ஜரூராக துவங்கி இருக்கின்றன. ஜனவரி முதல் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரூ.1.08 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டம் வரும் 2022ம் ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று புல்லட் ரயில் சேவையை நாட்டிற்கு அர்ப்பணிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. புல்லட் ரயில் கட்டணங்கள் விமானங்களுக்கு இணையாக இருக்கும் என்ற தகவல் உலவி வந்தன. இதுகுறித்து புதிய தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கின்றன. அதன்படி, புல்லட் ரயிலில் பயணிப்பதற்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 3,000 வரை நிர்ணயிக்கப்பட இருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. 

ஏசி முதல் வகுப்பு ரயில் கட்டணத்தைவிட ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்படும். உதாரணத்திற்கு, மும்பை பந்த்ரா- குர்லா காம்ப்ளஸ் ரயில் நிலையத்திலிருந்து தானே வரையில் பயணிக்க 250 ரூபாய் கட்டணமாக இருக்கும். சாதாரண ரயில்களில் 45 நிமிடங்கள் பிடிக்கும் நிலையில், புல்லட் ரயிலில் 15 நிமிடங்களில் சென்றுவிடலாம். முதல்கட்டமாக 10 பெட்டிகளை கொண்ட 24 ரயில் ஜதை புல்லட் ரயில்களை சேவைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். 

காலை மற்றும் மாலை வேளைகளில் 20 நிமிடங்களுக்கு ஒரு புல்லட் ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பானில் இயக்கப்படும் ஷின்கன்சென் புல்லட் ரயிலின் அடிப்படையிலான புல்லட் ரயில்கள்தான் இந்தியாவிலும் இயக்கப்பட இருக்கிறது. இந்த புல்லட் ரயில்கள் இதுவரை ஒருமுறை விபத்தில் சிக்கியது கிடையாது. 

உயிரிழப்புகளும் ஏற்பட்டது இல்லை. இந்நிலையில், சென்னை-பெங்களூரு-மைசூரு தடத்தில் அதிவேக ரெயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் மாநிலங்களவையில் தெரிவித்தார். இதுதொடர்பான மந்திரிசபை குறிப்பு இன்னும் தயாரிக்கப்படவில்லை என்றும், இப்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.