ஆவடி அருகே கோவில்பாதாகையில் நள்ளிரவில் வீடு புகுந்து உருட்டு கட்டையால் அடித்து கட்டிட தொழிலாளி முகம் சிதைத்து படுகொலை செய்யப்பட்டார். இதற்கு கள்ளத்தொடர்பு காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடி அருகே கோயில்பதாகை, வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (26). இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பெற்றோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். இதன் பிறகு, இவரை பாட்டி குப்பம்மாள் வளர்த்து வந்துள்ளார். அசோக்குமாரின் தம்பி கார்த்திக்(24), இதே பகுதி டேங்க் தெருவில் தனியாக வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டி வந்த அசோக்குமாருக்கு சரி வர தொழில் இல்லை. இதனை அடுத்து, அவர் சமீபத்தில் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அசோக்குமார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், அவர் வீட்டை பூட்டி விட்டு தனியாக தூங்கியுள்ளார். நள்ளிரவு சுமார்11.45 மணியளவில் இவரது வீட்டு கதவை சிலர் தட்டி உள்ளனர். இதனையடுத்து அசோக்குமார் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து கதவை திறந்து வெளியே வந்துள்ளார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 3பேர் கொண்ட கும்பல், இவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், அவர்கள் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டை எடுத்து, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில்,  அசோக்குமாருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இருந்த போதிலும், அந்த கும்பல் விடாது  அவரின் முகத்தை உருட்டு கட்டையால் அடித்து சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அப்போது, வீட்டு முன்பு அசோக்குமார் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனையடுத்து, அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், அங்கு சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்  விரைந்து வந்தனர்.

பின்னர், அவர்கள் பரிசோதனை செய்த போது அசோக்குமார் இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து, அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், ஆவடி உதவி கமிஷனர் ஜான் சுந்தர், ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட அசோக்குமாருக்கு மூன்று பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இதே பகுதியில் வசித்து வந்த திருமணமான பெண்ணுடன் அசோக்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவர் அசோக்குமாரை கண்டித்துள்ளார். இருந்த போதிலும், அவரும் அந்த பெண்ணும் தொடர்பை துண்டிக்காமல் இருந்துள்ளனர். இதனையடுத்து, அவர் வீட்டை காலி செய்து விட்டு பெண்ணுடன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்று விட்டார்.

இதன் பிறகும், கூட அசோக்குமார் செல்போன் மூலமாக அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். மேலும், கொலை செய்யப்படுவதற்கு 20நிமிடங்களுக்கு முன்பு கூட அந்த பெண்ணிடம் செல்போனில் பேசியது தெரியவந்துள்ளது. இதோடு மட்டுமல்லாமல், கடந்த சில தினங்களுக்கு முன்பு அசோக்குமார் டாஸ்மாக் பாரில் மது அருந்தி கொண்டிருந்த போது, ஒரு வாலிபருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஒருவரை  ஒருவர் அடித்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அசோக்குமார் கள்ளத்தொடர்பு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் அல்லது டாஸ்மார்க் பாரில் ஏற்பட்ட தகராறில் மர்ம நபர்கள் கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருந்த போதிலும் போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலை தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஆவடி அருகே கோயில்பதாகை கிராமத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து கட்டிட தொழிலாளியை அடித்து படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.