பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி.. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் தெறிக்கவிடும் அதிரடி அறிவிப்புகள் இதோ.!
அறிக்கையில் 2022-2023-ஆம் நிதியாண்டின் வருவாய் தலைப்பில் வரவு ரூ.2,824.77 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.3,613.35 கோடியாகவும், மூலதன வரவு ரூ.2,528.80 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.2,510.24 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சி 770 கோடி நிதி பற்றாக்குறையில் இருப்பது தெரியவந்துள்ளது.
பள்ளி மாணவர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை பேணிக்காத்து கல்வியை திறம்பட கற்றிட ஏதுவாக சென்னையில் 23 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மேலும் பல பள்ளிகளுக்கு விரிவுபடுத்த உள்ளதாக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2022 - 2023 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் 2022-2023-ஆம் நிதியாண்டின் வருவாய் தலைப்பில் வரவு ரூ.2,824.77 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.3,613.35 கோடியாகவும், மூலதன வரவு ரூ.2,528.80 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.2,510.24 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சி 770 கோடி நிதி பற்றாக்குறையில் இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் ரூ.800 கோடி, தொழில் வரி மூலம் ரூ.475 கோடி, முத்திரை தாள் மீதான கூடுதல் வரி மூலம் ரூ.170, மாநில நிதிக்குழு மானியம் மூலம் ரூ.500 கோடி, இதர வகையில் ரூ.879.77 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில்
முக்கிய அம்சங்கள்
* சென்னையில் 23 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
* 70 சென்னை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.186 கோடியில் இணைய இணைப்பு (Internet Connection)வழங்கப்படும்.
* 281 சென்னை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் விதமாக ரூ.40 லட்சம் செலவில் கண்காட்சிகள் நடத்தப்படும்.
* சென்னைப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் பயிலும் 72,000 மாணவ மாணவியருக்கு ரூ.7.50 கோடியில் விலையில்லா சீருடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
* நிர்யயா நிதி மூலம் 23.66 கோடியில் சானிட்டரி நாப்கின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* பள்ளிகளில் 5.47 கோடியில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும்.
* மாண்டிசோரி கல்விமுறை பிற மழைலையர் வகுப்புகளிலும் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.
* சென்னைப் பள்ளிகளில் குடிநீர் வழங்கும் குழாய்களில் ஏற்படும் பழுது, மின்சாதனங்களில் ஏற்படும் பழுது மற்றும் கழிவறைகளில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளை மாணவர்களின் நலன்கருதி உடனடியாக சரி செய்யப்படும்.
* சென்னைப் பள்ளி மாணவர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை பேணிக் காத்து கல்வியை திறம்பட கற்றிட, திருவான்மியூரை சுற்றியுள்ள 23 சென்னைப் பள்ளிகளில் சுமார் 5,000 மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் தன்னார்வலர்கள் மூலம் காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. காலைச் சிற்றுண்டி திட்டம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதால், மேலும் பல பள்ளிகளில் தன்னார்வலர்களின் மூலம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது" என அறிவிக்கப்பட்டுள்ளது.
* சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே வாசிப்புத்திறனை மேம்படுத்தவும், பொது அறிவினை வளர்க்கவும், போட்டித் தேர்வுகளை திறம்பட எதிர்கொள்வதற்கு ஏதுவாக பள்ளி நூலகங்களிலிருந்து புத்தகங்களை வீட்டிலும் பயன்படுத்த வழிவகை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
* 20 சென்னைப் பள்ளிகளில் ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களிடையே ஆங்கிலம் பேசும் திறனை வளர்ப்பதால் உயர்கல்வி , வேலைவாய்ப்பு மற்றும் உலகத்தின் எப்பகுதிக்கு சென்றாலும் எதிர்கொள்ளும் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக பல பள்ளிகளில் ஆங்கில மொழி பேசும் பயிற்சியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
* பள்ளிகளில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாலின குழுக்கள் அமைக்கப்படும்.
* கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த ரூ.4.62 கோடி
* ரூ.3.5 கோடி செலவில் 3 டயாலிசிஸ் மையங்கள்
* அனைத்து மண்டலங்களிலும் படிப்படியாக டயாலிசிஸ் மையங்கள் ஏற்படுத்தப்படும்.
* சென்னை மாநகராட்சியில் e-office அறிமுகப்படுத்தப்படும். இதன் வாயிலாக வரும் காலங்களில் பொதுமக்களுக்கான சேவைகள் காலதாமதமின்றி விரைவாக செய்து முடிக்க இயலும் என அறிவிக்கப்பட்டுள்ளது
* சென்னை மாநகர் முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்
* சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும்
* கடந்த ஆண்டில் சென்னை மாநகராட்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலமாக 11,539 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.
* தனியார் பங்களிப்புடன் 1000 பேருந்து நிழற்குடைகள்
* கவுன்சிலருக்கு வார்டு மேம்பாட்டு நிதி ரூ30 லட்சத்தில் இருந்து ரூ.35 லட்சமாக உயர்த்தப்படும்.
* மறுசுழற்சி செய்ய இயலாத எரியக்கூடிய 16,500 டன் உலர் கழிவுகள் எரிகலன் மூலம் அழிக்கப்படும்.
* சொத்து வரியை பொது மக்கள் எளிதாக செலுத்த கியூஆர் கோடுஅறிமுகம் செய்யப்படும்.