கடந்த 7 தேதி இரவு சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் முதல்வர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக கூறி தொடர்பை துண்டித்து உள்ளார். மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடித்து விடும் என்று எச்சரித்து  உள்ளார்.

இப்படியாக 19  முறை காவல்துறைகட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து முதல்வர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால் உஷாரான காவல்துறையினர் முதல்வர் இல்லம் அமைத்திருக்கும் பசுமை வழிச்சாலை முழுவதும் பாதுகாப்பை பலபடுத்தினர்.

இதையடுத்து சைபர் கிரைம்  போலீசார் மிரட்டல் விடுத்த மர்ம நபரின் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அதன்படி  தாம்பரம் அடுத்த சேலையூர் பராசக்தி நகர், 2-வது தெருவை சேர்ந்த கார் ஓட்டுநர்   வினோத்குமார் (வயது 33)  என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில்   குடிபோதையில்  முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் .

இவர் ஏற்கனவே கடந்த மாதம் 28 ம் தேதி முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ம் தேதி ஜாமினில் வெளியே வந்து உள்ளார். இந்த நிலையில்  வெளியே வந்த இரண்டு நாட்களில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அவரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.