மோதல் காரணத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தத்தாத்ரேயர் கோயிலின் முக்கிய நுழைவாயில் தடுப்பு எழுப்பி அடைக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொழுப்பேடு அருகே பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் தத்தாத்ரேயர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோயிலில் விநாயகர், ஆஞ்சநேயர், கோமாதா, தட்சிணாமூர்த்தி ஆகிய சன்னதிகள் உள்ளன.

இங்கு தொழுப்பேடு, அச்சிறுப்பாக்கம், கடமலை புத்தூர், மதுராந்தகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். மேலும், தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளதால், அவ்வழியாக பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் செல்வோர், இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

கோயில் முகப்பிலேயே தட்சிணாமூர்த்தி பிரமாண்ட சிலை அமைந்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிகளவில் இந்த கோயிலில் காணிக்கை செலுத்துகின்றனர். இதனால், இப்பகுதியில் உள்ள மற்ற கோயில்களுக்கு வருமானம் இல்லை. இதையொட்டி கோயில் நிர்வாகத்துக்கும், பூசாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோயில் நிர்வாகத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன், பொதுமக்கள் வழிபாடு செய்ய கோயிலுக்கு வரும் முக்கிய நுழைவாயிலை தடுப்பு சுவர் வைத்து அடைத்தனர். இதனால், பக்தர்கள் தற்போது சுற்றி சென்று, பின்புறம் உள்ள வழியாக கோயிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.

அதே நேரத்தில், பின்புறம் உள்ள வழியும், அடிக்கடி பூட்டப்படுவதாகவும், இதனால், கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் வழிபாடு செய்ய முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தியை பின்பக்கமாக சுற்றி சென்று தரிசனம் செய்யக்கூடாது என்பது ஐதீகம். ஆனால், கோயில் நிர்வாகம் மற்றும் பூசாரிகளுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக ஐதீகத்தை மீறும் நிலை உள்ளது என பக்தர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

எனவே, ஏற்கனவே பக்தர்கள் சென்று வந்த, முக்கிய நுழைவாயிலை பயன்படுத்துவதற்கும், திடீரென எழுப்பியுள்ள தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் எனவும் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கு, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர் பார்ப்பாக உள்ளது.