விளையாட்டு மைதான மேம்பாடு என்ற பெயரில் முறைகேடு? பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு
கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் முறையான அடிப்படை வசதிகள், கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்று பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் குற்றம் சாட்டி உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருக்கி வரும் நிலையில் திமுகவுக்கு மாற்று நாங்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் பாஜக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் கட்சி செய்யும் தவறுகளை வீடியோ ஆதாரத்துடன் பாஜகவினர் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் அமைந்துள்ள கோபாலபுரம் ஸ்டேடியத்தில் வினோஜ் பி செல்வம் நேரடி ஆய்வை மேற்கொண்டார். இந்த மைதானத்தில் முறையான அடிப்படை வசதிகள், கழிவறை மற்றும் பெண் உடைமாற்றும் அறை கூட இல்லாத அவலம் இருப்பதை சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னை மாநகரில் அமைந்துள்ள மிகப் பழமையான விளையாட்டு மைதானங்களில் ஒன்று கோபாலபுரம் ஸ்டேடியம். எந்தப் பின்புலமும் இல்லாத, திறமை மற்றும் நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட எண்ணற்ற விளையாட்டு வீரர்கள் இங்கு பயிற்சி செய்து சாதனையாளர்களாக கடந்த காலங்களில் உயர்ந்திருக்கின்றனர். கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து போன்ற பலவிதமான விளையாட்டுகளுக்கு பயிற்சி செய்கின்ற இடமாக இந்த கோபாலபுரம் மைதானம் இருந்து வருகிறது. ஆனால், இந்த மைதானத்திற்கு முறையான பராமரிப்பு பணிகள் செய்யப்படாத நிலையில், அடிப்படை வசதிகளான கழிவறை மற்றும் பெண் வீராங்கனைகள் பயன்படுத்திக் கொள்வதற்கான உடைமாற்றும் அறை போன்றவை கூட இல்லாத அவலமான சூழல் நிலவுகிறது.
அவரு யோசிக்காம எந்த முடிவும் எடுக்க மாட்டார்; விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகர் பாலா நச் பதில்
இதே கோபாலபுரம் பகுதியில்தான், இன்றைய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தன்னுடைய தாத்தா கருணாநிதியுடன் இணைந்து வசித்து வந்தார் என்பதை நாம் இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது. அதே சமயம் விளையாட்டு மைதான மேம்பாடு என்ற பெயரில் திமுக அரசு விதிக்கும் மற்றொரு சூழ்ச்சி வலை குறித்தும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. கோபாலபுரம் மைதானம் அடங்கிய பகுதி ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியின் கீழ் வருகிறது.
இந்த தொகுதியின் எம்எல்ஏ, மருத்துவர். எழிலன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோபாலபுரம் மைதானத்தின் உள்ளே பாக்ஸிங் பயிற்சி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ள மைதானத்தில், தமிழக அரசு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பயிற்சி மையத்தில் அனைத்து மக்களுக்கும் அனுமதி கிடைக்கும் என்று நினைத்தால் அது தவறான கணிப்பு ஆகும். ஏனென்றால் இதுபோன்ற பயிற்சி மையங்களை கட்டி முடித்து. அதனை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார் கிளப்புகளிடம் ஒப்படைக்கின்ற வழக்கம் இருந்து வருகிறது. கோபாலபுரத்திலும் ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்ற ஒருவருக்கு இந்த பாக்ஸிங் பயிற்சி மையத்தை ஒப்படைக்கின்ற திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆகவே, பயிற்சி மையம் கட்டி முடித்த பிறகு சாமானிய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அதனை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். சந்தா கட்டுகின்ற பணக்கார வீட்டு பிள்ளைகள் மட்டுமே வந்து பயிற்சி பெறுகின்ற இடமாக அது மாறிவிடும். ஏற்கனவே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் இதுபோன்று டென்னிஸ் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு, பின்னர் அது தனியார் கிளப் போல செயல்பட்டு வருவதை விளையாட்டு வீரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கோபாலபுரம் மைதானத்திலும் அதே போன்ற நிலை ஏற்படும் என்ற கவலையை வீரர், வீராங்கனைகள் வெளிப்படுத்துகின்றனர். அது மட்டுமல்லாமல், பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி செய்து கொண்டிருந்த விளையாட்டு மைதானத்தில் பெரும் பகுதியை பாக்ஸிங் பயிற்சி மையத்திற்கு மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் மற்ற விளையாட்டுகளுக்கான பயிற்சி செய்ய முடியாத சூழல் உருவாகும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.
மக்களின் வரிப்பணத்தில் பாக்சிங் பயிற்சி மையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் சூழலில், இனி அதனை தடுத்து நிறுத்தினால் யாருக்கும் பலன் இல்லாமல் போய்விடுமோ என்ற கேள்வியும் எழுகிறது. அதேசமயம் ஏழை, நடுத்தர வர்க்க வீரர் மற்றும் வீராங்கனைகளையும் இந்த பயிற்சி மையத்தில் அனுமதிப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இறுதியாக மைதானத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, விளையாட்டு உபகரணங்களின் தேவை உட்பட பல்வேறு விதமான கோரிக்கைகளை இப்பகுதி இளைஞர்கள் முன் வைத்தனர். அதுகுறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தேன் என தெரிவித்துள்ளார்.