தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பின்னி மில் உரிமையாளரும், ராமசந்திரா மருத்துவமனையின் பங்குதாரரும் எத்திராஜ் முதலியார் வயது மூப்பு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். 

உழைப்பால் உயர முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர். தொடக்கத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றிய எத்திராஜ் முதலியார், பின்னர் தமது பள்ளித் தோழர் என்.பி.வி இராமசாமி உடையாருடன் இணைந்து சிறிய அளவில் தொழில்களைத் தொடங்கி படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறினார். கடும் உழைப்பின் பயனாக தமிழகத்தின் குறிப்பிடத்தக்க தொழிலதிபராக உருவெடுத்தார். 

மேலும், பல தொழில் நிறுவனங்களுக்கு உரிமையாளராகவும், ராமசந்திரா மருத்துவமனை நிர்வாகத்தின் பங்குதாரகவும் இருந்தவர். தமிழகத்தின்  மிகப்பெரிய தொழிலதிபராக உருவெடுத்தாலும் கூட, எளிமையின் சின்னமாக திகழ்ந்தவர். ஏழைகளுக்கு  ஏராளமான உதவிகளை செய்து வந்தவர். கல்விக்காக உதவி கேட்ட அனைவருக்கும் உதவியவர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.