சென்னையில் மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு வந்தனர். அதீத வேகத்தில் பைக்கில் செல்லும் போது நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. ரேஸில் ஈடுபவர்களை மட்டுமின்றி எதிரில் வரும் வாகன ஓட்டிகளும் இந்த விபத்தில் சிக்கி மரணமடையும் சம்பவங்களும் நடந்திருக்கிறது. இதன்காரணமாக பைக் ரேஸில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்ததையடுத்து சில நாட்களாக பைக் ரேஸ் நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னை புறநகர் பகுதிகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நேற்று சென்னை மெரினா கடற்கரை சாலையில் இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர்.  இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த அவர்கள், முன்பக்க சக்கரங்களை தூக்கியும், அதிகமான ஒலி எழுப்பியும் சென்றதில் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்தனர்.

நேற்று நடந்த பைக் ரேஸில் நிகழ்ந்த விபத்தில் திருவல்லிகேணியைச் சேர்ந்த ரகுமான் என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வந்துள்ளது. இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரை மட்டுமின்றி எதிரில் வருபவரின் உயிரையும் பறிக்கும் இந்த ஆபத்தான விளையாட்டை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.