சென்னையில் பஞ்சராகி நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகரப் பகுதிகளில் தற்போது சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. விபத்துகளை தடுப்பதற்காக அரசுத் தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி இருந்தபோதிலும் விபத்துகள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், சென்னை திருமங்கலத்தில் சாலையில் பஞ்சராகி நின்ற லாரி மீது அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர் பிரசாந்த் (20), அவரது நண்பர் விஜய்(17) ஆகிய இருவரும் சம்பவ ரத்த வெள்ளத்தில் துடிதடித்து உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த சதீஷ் (19) கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 2 கல்லூரி மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.