முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரும்,  தமிழக வணிக வரித்துறை செயலாளருமான பீலா ராஜேஷின் தந்தை ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி.யுமான எல்.என்.வெங்கடேசன் உடல்நலக்குறைவால் காலமானார்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் வாழையடியை சேர்ந்தவர் எல்.என்.வெங்கடேசன் (81). 1962 ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான இவர், பல்வேறு பதவிகளில் மிக திறம்பட பணியாற்றிய அவர், டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு அடைந்து ஓய்வுபெற்றார். அதன்பிறகு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் வசித்துவந்தார்.

இந்நிலையில், சிறிதுகாலம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், நேற்று காலமானார். எல்.என்.வெங்கடேசனின் மனைவி ராணி வெங்கடேசன், சாத்தான்குளம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆக பணியாற்றியவர். எல்.என்.வெங்கடேசனுக்கு துபாயில் இருக்கும் பீனா மணிவண்ணன் என்ற மகளும், தமிழக வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை செயலாளராக இருக்கும் டாக்டர் பீலா ராஜேஷ் என்ற மகளும், அமெரிக்காவில் வசிக்கும் என்ஜினீயர் கார்த்திக் வெங்கடேசன் என்ற மகனும் இருக்கிறார்கள். எல்.என்.வெங்கடேசன் உடல் கொட்டிவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.