தமிழ்நாட்டில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 102 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை  411ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் கேரளாவை மிஞ்சி முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவை நெருங்கிவிட்டது தமிழ்நாடு. தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாவது அனைவருக்கும் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், யாரும் பயப்பட வேண்டாம் என்று ஆறுதலாக பேசியிருக்கிறார் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ். 

நேற்று வரை 309 பேர் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 264 பேர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்பதை நேற்று உறுதிப்படுத்தினார் பீலா ராஜேஷ். இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட சுமார் 1200 பேரை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். தினமும் செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு குறித்து அப்டேட் செய்துவரும் பீலா ராஜேஷ் இன்றும் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 411ஆக உள்ளது. இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். கொரோனாவால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள 411 பேரில் 364 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்.

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் சுமார் 1200 பேரை கண்டறிந்து இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இன்னும் கொரோனா சமூக தொற்றாக பரவவில்லை. நாம் இன்னும் 2வது கட்டத்தில் தான் இருக்கிறோம். பொதுச்சமூகத்தில் கொரோனா பரவவில்லை. 

எண்ணிக்கை அதிகரிப்பதால் யாரும் பயப்படவேண்டாம். பரிசோதனை முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருப்பதால் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளை சுற்றியுள்ள 5 கிமீ பகுதிகளில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்வதுடன், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

ஏற்கனவே 5000 பேர் இந்த பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, கொரோனா கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் ஒருவர் தான் உயிரிழந்துள்ளார். மற்ற கொரோனா நோயாளிகள் அனைவரின் உடல்நிலையும் சீராக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

 கொரோனா தொற்று எளிதாக பரவக்கூடிய முதியவர்கள், ஏற்கனவே உடலில் பாதிப்புள்ளவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். யாரும் பயப்பட வேண்டாம். இன்னும் சில தினங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து நிலைமை கட்டுக்குள் வந்துவிடும் என்று பீலா ராஜேஷ் நம்பிக்கையளிக்கும் வகையில் பேசியுள்ளார்.