இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை..? பேனர் விவகாரத்தில் அரசை கிழித்தெடுத்த நீதிபதிகள்..!
சென்னையில் சட்டவிரோத பேனர் விழுந்து இளம்பெண் பலியானது தொடர்பாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். அரசுக்கு இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? என உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
சென்னையில் சட்டவிரோத பேனர் விழுந்து இளம்பெண் பலியானது தொடர்பாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். அரசுக்கு இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? என உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
சென்னை பள்ளிக்கரணையில் நேற்று அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் சாலை முழுவதும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, ரேடியல் சாலையில் ஸ்கூட்டரில் சுபஸ்ரீ வந்தபோது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனரில் ஒன்று, திடீர் என அவர் மீது விழுந்து பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதையடுத்து தாமாகவே முன்வந்து விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என்று கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை சாலையில் அதிமுகவினர் விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டது தொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரித்த நீதிபதிகள் விதி மீறி பேனர்கள் வைக்கமாட்டோம் என முதல்வர் அறிக்கை வெளியிடலாமே? என கேள்வி எழுப்பினர்.
மேலும், கடந்த ஆண்டு சாப்ட்வேர் என்ஜினீயர் ரகு என்பவர் பேனரால் உயிரிழந்தார். ஒரு மனித உயிருக்கு மதிப்பு இல்லாமல் போனது உயிரின் மதிப்பு அதிகாரிகளுக்கு தெரியவில்லையா ? அதிகாரிகள் இந்த அளவுக்கு மெத்தனமாக ஏன் இருந்தனர். இன்னும் எத்தனை லிட்டர் ரத்தத்தை குடிக்க அதிகாரிகள் விரும்புகின்றனர். இன்னும் எத்ததை உயிர்களை பலி வாங்க துடிக்கின்றனர். சட்டவிரோத பேனரில் எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும் இன்னும் இது போன்றுதான் தொடர்கிறது.
பேனர் வைத்தால்தான் விஐபிக்கள் வருவார்களா? சென்னையில் மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுங்கள். நீதிமன்ற உத்தரவுகளை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டோம். எந்த கட்சி, ஆட்சிக்கு வந்தாலும், பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன. விதிமீறி பேனர் வைப்பதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் எல்லாம் அரசியல் ஆக்கப்படுகிறது. அரசியல் கட்சியினருக்கு விஸ்வாசமாக அதிகாரிகள் செயல்படுகின்றனர் என நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், பேனர் வைக்க கூடாது என ஸ்டாலின் கூறினாலும் மக்களிடம் அதை ஏன் கொண்டு செல்லவில்லை? எனவும் வினவியுள்ளனர். இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி, காவல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கூறிவிட்டு வழக்கை பிற்பகலில் ஒத்திவைத்தனர்.