உலகளவில் பெரும் நாசத்தை விளைவித்து வரும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாக பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென காவல்துறை எச்சரித்திருக்கிறது.

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக மளிகை, காய்கறி, மருந்தகங்கள், உணவகங்கள் ஆகியவை செயல்பட அரசு அனுமதி அளித்திருக்கிறது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி கடைகள் திறந்திருக்கலாம் என்றும் கடைக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டுமெனவும் அரசு கண்டிப்புடன் கூறியுள்ளது. உணவங்கள் செயல்பட்ட போதும் அங்கு மக்கள் அமர்ந்து சாப்பிட கூடாது, பார்ச்சல் மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் பேக்கரி கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேலைக்காக சென்னையில் தங்கியிருக்கும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதால் பேக்கரிகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்று முதல் (ஏப்ரல் 12) பேக்கரிகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திறக்கலாம் என கூறியிருக்கும் மாநகராட்சி ஆணையர் பாா்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.