கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு டாக்டர்கள் நேற்று முதல் ஒத்துழையாமை போராட்டத்தை தொடங்கினர். அரசு செவி சாய்க்காவிட்டால் ஆக.27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் மற்றும் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாததால் தங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்த அரசு டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக 5 டாக்டர்கள் சங்கங்களை ஒருங்கிணைந்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த கூட்டமைப்பு சார்பில் நேற்று முதல் முதல்கட்ட போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதாவது, நேற்று முதல் ஆகஸ்ட் 8ம்தேதி வரை ஒத்துழையாமை போராட்டத்தை நடத்துகின்றனர்.

அதன்படி, நேற்று காலை தமிழகம் முழுவதும் உள்ள அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் மற்றும் அரசு டாக்டர்கள் இந்த ஒத்துழையாமை போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன்படி, வாராந்திர டாக்டர்கள் ஆய்வு கூட்டத்தை அரசு டாக்டர்கள் புறக்கணிக்கின்றனர்.

அதேபோன்று அரசின் சிறப்பு திட்ட மருத்துவ முகாம்கள் எதிலும் டாக்டர்கள் பங்கேற்காமல் இருக்க முடிவு செய்துள்ளனர். அதேநேரம், இந்த போராட்டத்தால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றும் அறிவித்துள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் எந்த நோயாளிகளுக்கும் சிகிச்சை கிடைப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது என்று கூறப்படுகிறது.