காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் குடம் ஊர்வலம், காவடி எடுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

செய்யூர் தாலூகா சித்தாமூர் ஒன்றியம் பெருக்கரணை கிராமத்தில் புகழ்பெற்ற நடுபழனி எனப்படும் ஸ்ரீ மரகத பாலதண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

இந்நிலையில் 34ஆம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாகவும், வெகு விமரிசையாகவும் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை பக்தர்கள் 108 பால்குடங்கள் மற்றும் காவடிகளை சுமந்தபடி கோயில் மலையை சுற்றி ஊர்வலம் வந்தனர். பால் குடங்கள் கோயிலை வந்தடைந்ததும் பாலதண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடத்தப்பட்டன.

விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகபெருமானை வழிபட்டு சென்றனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் பரணியை ஒட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், பஸ், வேன் பைக் உள்ளிட்ட வாகனங்களில் கோயிலுக்கு வந்தனர்.

கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் சரவண பொய்கையில் நீராடி மொட்டை அடித்து, வேல்தரித்து, பால் காவடி, புஷ்ப காவடி எடுத்தபடி மாடவீதிகளில் உலா வந்து வேண்டுல்களை நிறைவேற்றினர். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆடி கிருத்திகையையொட்டி கோயிலுக்கு வந்த பக்தர்களுக்காக குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. மேலும், தாம்பரம், கோயம்பேடு, உயர்நீதிமன்றம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன.

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் பழமையான ஸ்ரீவள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் பாடப் பெற்ற இந்த கோயிலில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

ஆண்டு தோறும் இக்கோயிலில், ஆடி கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறும். இதைதொடர்ந்து இந்தாண்டு ஆடிக் கிருத்திகை விழா இரவு 12 மணி முதல் வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் காவடி ஏந்தி, வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் மற்றும் சென்னையில் இருந்து சிறப்பு பஸ் வசதிகளை அரசு போக்குவரத்து துறை சார்பில் செய்யப்பட்டது.