அத்திவரதர் தரிசனத்தை மேலும் சில நாட்கள் நீட்டிக்ககோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. 

கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. முதலில் சயன கோலத்தில் அருள் பாலித்த அத்திவரதர், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 46 நாட்களில் சுமார் சுமார் 1 கோடி பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து சென்றுள்ளனர். இந்நிலையில், அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இதனிடையே, அத்திவரதர் தரிசனத்தை மேலும் சில நாட்கள் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, அமர்வில் விசாரணைக்கு வந்தது.  

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆகமவிதிபடி 48 நாட்களில் அத்திவரதரை குளத்தில் வைப்பது மரபு. முன்னர் அதே நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக தெரிவித்தார். மேலும், மத வழிபாட்டு முறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என வாதிட்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் கோயில் மரபு வழிபாட்டு நடைமுறைகளில் தலையிட முடியாது. கோயில் நிர்வாகமும், அரசும் தான் முடிவெடுக்க வேண்டும் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.