அத்தி வரதர் வைபவத்தில், நாளை மதியம் 12 மணிக்கு கிழக்கு கோபுர வாயில் மூடப்படும் என கலெக்டர் பொன்னையா கூறினார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 1ம் தேதி தொடங்கிய அத்திவரதர் வைபவம், வரும் ஆகஸ்ட் 17ம் தேதிவரை நடைபெறுகிறது. அத்திவரதர் ஜூலை 31ம் தேதிவரை சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 17ம் தேதிவரை நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

சயன கோலம் நாளையுடன் முடிவடைவதால் நின்ற கோலத்தில் அத்திவரதர் அருள்பாலிக்க போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. இதனால், நாளை மதியம் 12 மணியுடன் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் கிழக்கு கோபுர வாயில் மூடப்படும் என கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் பொன்னையா, செய்தியாளர்களிடம் கூறியதாவது.

ஆகஸ்ட் 1ம் தேதி அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்க உள்ளதால், 31ம் தேதி பொது தரிசனத்துக்கு கிழக்கு கோபுர நுழைவாயில் வழியாக மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் தரிசனம் முடித்து விட்டு மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும்.

மேற்கு கோபுரம் வழி தரிசனத்துக்கு விஐபி, டோனர் பாஸ் உள்ளவர்கள் 3 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள். 31ம் தேதி மாலை 5 மணிக்குமேல் அத்திவரதரை நின்ற கோலத்தில் காட்சியளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். அதைதொடர்ந்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் காலை 5 மணி முதல் எப்போதும் போல் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.

மேலும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதால், பக்தர்கள் மாலை 5 மணிவரை அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவார்கள். இதையடுத்து இரவு 8 மணிக்கு திருக்கல்யாண வைபவம் முடிந்த பின்னர் மீண்டும் அத்திவரதரை தரிசிக்கலாம்.

அதேபோன்று ஆகஸ்ட் 15ம் தேதி ஆடி கருடசேவை உற்சவம் நடைபெறுவதால், அன்று மாலை 5 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசிக்க அனுமதி கிடையாது என்றார்.