முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்டுள்ளது.
Tamilnadu CM Stalin's Health Update: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான தலைச்சுற்றல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. திமுகவின் மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
மேலும் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது இருவரும் முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை நன்றாக உள்ளது. அவர் விரைவில் வீடு திரும்புவார்'' என்று தெரிவித்தனர். இந்நிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளது.
அப்பல்லோ மருத்துவமனை லேட்டஸ்ட் அப்டேட்
அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ''மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் தொடர்பான அறிகுறிகளைக் கண்காணிப்பதற்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மேலும் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு வேறு சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. அவர் மருத்துவமனையில் இருந்து தனது பணிகளை மேற்கொள்வார்'' என்று கூறப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் பேட்டி
இதேபோல் ஸ்டாலினின் மகனும், தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளார். ''இரண்டு, மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக பணிகள் இருந்ததால் ரோட் ஷோ உள்ளிட்டவற்றில் முதல்வர் கலந்து கொண்டதால் சிறிது உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். இப்போது முதல்வர் நன்றாக உள்ளார். மருத்துவர்கள் இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். 2 நாட்களில் வீடு திரும்பி விடுவார்'' என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி நலம் விசாரிப்பு
இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசி நலம் விசாரித்தார். இதேபோல் மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஆகியோரும் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் முதல்வர் ஸ்டாலின் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.
