சுர்ஜித் எனக்கூறி  சமூக வலைத்தளத்தில் உலாவி வரும் புகைப்படம்  சுர்ஜித்துடையது அல்ல என்றும் அது வேறு ஒரு சிறுவனின் புகைப்படம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.  திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டு பட்டியைச் சேர்ந்த சிறுவன் சுர்ஜித் கடந்த 25-10- 2019 மாலை 5:45 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்,   அதனையடுத்து சிறுவனை மீட்கும் பணி 80 மணி நேரமாக நீடித்த நிலையில் இன்று அதிகாலை 4:30 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டான்.  உடனே சுர்ஜித்தின் உடலுக்கு மருத்துவமனையில்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

 

பின்னர் சுர்ஜித் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சுர்ஜித்,  இறுதி சடங்குகள் செய்யப்பட்டு நல்லாடக்கம் செய்யப்பட்டான்.  சுர்ஜித் உயிருடன் மீட்க்கப்பட்டுவிடுவான் என எதிர்நோக்கிக் காத்திருந்த நிலையில் அவன் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதி மக்களை மட்டுமின்றி இந்திய மக்களையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து நாடுமுழுவதிலும் இருந்து சுர்ஜித்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சுர்ஜித் மரணத்திற்காக ஹேஸ்டாக்குகள் உருவாக்கப்பட்டு அவைகள் ட்ரெண்டாகி வருகின்றன.  இந்நிலையில் பலரும் சுர்ஜித்தின் புகைப்படங்களை பகிர்ந்து அவன் இறப்புக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

அதேவேளையில் சுர்ஜித்தின் புகைப்படம் என கூறி வேறொரு சிறுவனின் புகைப்படமும்,  வீடியோவும் , அதிக அளவில் பகிரப்படுகின்றன. அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் நடன மாடும் காட்சி உள்ளது.  யாரோ ஒரு சிறுவனின் அந்த வீடியோவை சுஜித் வீடியோ எனக்கூறி சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகின்றனர்.  அந்த வீடியோவை வைத்து  சோகம் இழையோட பாடல்கள் அமைத்து, துக்கம் அனுசரித்து வருகின்றனர்.  யாரோ ஒரு சிறுவனின் வீடியோவை இறந்த சுஜித் வீடு எனக்கூறி பகிர்ந்து வருவது சோகத்திலும் சோகம் என கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.