கொரோனா மருத்துவ முகாம் தேவைகளுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை ஆணையர் பிரகாஷ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கொரோனா மருத்துவ முகாம் தேவைகளுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை ஆணையர் பிரகாஷ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தனிமைப்படுத்துதல் முகாம்கள் அமைக்க பல கட்டடங்கள் தற்போது உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகள் உள்பட பல கட்டிடங்கள் தற்போது தனிமைப்படுத்தல் முகாமாக மாறி உள்ளன. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாணவர் விடுதியும் தனிமைப்படுத்துதல் முகாமாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் வரும் 20-ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பதிவாளருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், பல்கலைக்கழக விடுதியில் மாணவர்களின் உடைமைகள் இருப்பதால் இப்போதைக்கு ஒப்படைக்க முடியாது எனத் துணை வேந்தர் சூரப்பா கூறியதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்;- கொரோனா தனிமை முகாம் பயன்பாட்டுக்காக அண்ணா பல்கலைக்கழகம் கட்டாயம் ஒப்படைக்க வேண்டும். பேரிடர் விதிப்படி பல்கலைக்கழகம் விடுதிகளை கட்டாயம் ஒப்படைத்துதான் ஆக வேண்டும். நாளை மாலைக்குள் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை ஒப்படைக்காவிடில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
