அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக அமித்ஷா மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Amit Shah Confirms Annamalai To Get National Role: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டன. அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த கூட்டணி அமைப்பதற்கு முன்பாக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

அண்ணாமலை அடுத்து என்ன செய்ய போகிறார்?

அதிமுகவுக்கும், அண்ணாமலைக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்த நிலையில், அதிமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார் என ஒருபக்கம் தகவல்கள் பரவின. அண்ணாமலை அடுத்து என்ன செய்ய போகிறார்? அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதா? என்ற கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது.

அண்ணாமலையை பாராட்டிய அமித்ஷா

இத்துடன் நின்று விடாமல் அண்ணாமலைக்கு எம்.பி. பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அதிமுக, பாஜக கூட்டணி அமைந்தவுடன் அமித்ஷா இதனை உறுதிப்படுத்தி இருந்தார். ''தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அளித்த பங்களிப்பு பாராட்டத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலை ஜியின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு செல்கிறார். பாஜகவின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும்'' என்று கூறியிருந்தார்.

அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் எதிரும் புதிரும்

இந்நிலையில், ஒரு நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள அமித்ஷா, ''அண்ணாமலைக்கு கட்சியில் தேசிய பொறுப்பு வழங்கப்படும்'' என்று மீண்டும் கூறியுள்ளார். நயினார் நாகேந்திரன் தலைவராக ஆன பிறகும் தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலைக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. அண்ணாமலையில் ஆதரவாளர்கள் வார் ரூம்கள் மூலம் அதிமுகவை குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 15 எக்ஸ் தள கணக்குகள் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டது.

அமித்ஷா எச்சரிக்கை

இது நயினார் நாகேந்திரன் காதுகளுக்கு சென்ற நிலையில், பாஜகவில் இனி வார் ரூம் அரசியல் இருக்கக் கூடாது என்று கூறியதுடன் அதிமுகவும், எடப்பாடி பழனிசாமியையும் விமர்சிக்கக் கூடாது. கட்சியின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் அமித்ஷா மதுரை வந்தபோதும் அண்ணாமலை குறித்து நயினார் நாகேந்திரன் புகார் அளித்ததாகவும், இதனால் அமித்ஷா அண்ணாமலையை கூப்பிட்டு கண்டித்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

அமித்ஷாவின் பிளான் இதுதான்

இதனால் அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு அளித்து அவருடைய அதிருப்தியை போக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார். மேலும் அண்ணாமலைக்கு தமிழ்நாட்டில் ஓரளவு செல்வாக்கு இருப்பதால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அவரை முழுமையாக பிரசாரத்துக்கு பயன்படுத்தவும் அமித்ஷா முடிவு செய்துள்ளார். தேசிய பொறுப்பு கொடுக்கப்பட்டால் அண்ணாமலையை மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களையும் சைலண்ட் செய்ய முடியும். மேலும் அவரின் செல்வாக்கையும் தேர்தலில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அமித்ஷாவின் இந்த கணக்கு தேர்தலில் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.