சாலை விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை  தக்க நேரத்தில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் மட்டுமின்றி சக காவலர்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் அருகே சென்னை திருமங்கலத்தை சேர்ந்த 60வயது மதிக்க தக்க வயதான தம்பதியர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது வேகத்தடை மீது ஏறியதில்  அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது அதை கண்ட அக்கம் பக்கத்தினர் பதறினர்.  

காவல் நிலைய எதிரே இச்சம்பவம் நேரிட்டதால் இந்த தகவல் அறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் விஜயராகவன் மூதாட்டியை மீட்டு தன் காவல் வாகனத்தில் ஏற்றி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.ஆம்புலன்ஸ் வருகையை எதிர்ப்பாராமல் தன்னுடைய காவல் வாகனத்திலேயே தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்த ஆய்வாளர் விஜயராகவன் அவர்களுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி சக காவலர்களிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.