Air pollution: மூச்சுத் திணறும் சென்னை! போகி கொண்டாட்டத்தால் அதிகரிக்கும் காற்று மாசு!
போகி பண்டிகைக்காக பழைய பொருட்களை அதிக அளவில் எரிப்பதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளைய தினம், ஞாயிற்றுக்கிழமை, கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
போகி கொண்டாட்டத்தில் வீட்டில் உள்ள பழைய பொருட்களையும் பயன்படுத்தாத பொருட்களையும் தீயில் இட்டு எரிப்பது வழக்கமாக உள்ளது. இதுவரை இருந்த தீமைகள் அனைத்தும் அந்தத் தீயில் பொசுங்கிவிடும் என்றும் இனி வாழ்க்கையில் நன்மையை பிறக்கும் என்றும் மக்கள் நம்புகின்றனர்.
இதனை முன்னிட்டு ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் போகி’ என்று சொல்வார்கள். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்றும் கூறுவார்கள்.
Pongal: ஜனவரி 16ஆம் தேதி ரேஷன் கடைகள் திறக்கப்படுமா?
இதன்படி, தமிழக மக்கள் இன்று தங்கள் வீட்டில் உள்ள பொருட்களைக் கழித்துக்கட்டி தீயிட்டுக் கொளுத்தி போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார். தலைநகர் சென்னையில் இவ்வாறு குப்பைகளை எரிப்பது அதிகமாகி, நகரின் பல பகுதிகளை பூகைமூட்டம் சூழ்ந்துள்ளது.
சாலையில் வாகனங்களில் போவோரும் நடந்து செல்வோரும் முன்னால் வருவதைத் தெளிவாகப் பார்க்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காற்றில் மாசு அதிகரித்து காற்று மாசு மோசமான நிலையை அடைந்துள்ளது என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கிறது. புகைமூட்டத்தால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படும் தரையிரங்குவதும் தாமதம் ஆகிறது.
சென்னையில் காற்றின் தரக்குறியீடு சாதாரண நாட்களில் 80 வரைதான் இருக்கும். இப்போது, 150 க்கு மேல் சென்றுள்ளது. காற்றின் தரக்குறியீடு ஆலந்தூரில் (165) அதிகபட்சமாக உள்ளது.
கொடுங்கையூர் (140), எண்ணூர் (128), மணலி (121), பெருங்குடி (120), அரும்பாக்கம் (115) ஆகிய இடங்களிலும் காற்று மாசு மோசமாகியுள்ளது. நிலை இன்னும மோசமாக வாய்ப்புள்ளது என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.