தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

சென்னை மற்றும் பல வடதமிழக மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை, பகலிலும் வலுவிழக்காமல் தொடர்கிறது. இது குறித்து பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான், தனது முகநூல் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ‘’தொடர்ந்து இரண்டாவது நாளாக சென்னை நகரில் பரவலான மழை பெய்து வருகிறது. மிகவும் அரிதான நிகழ்வு இது. தற்போது நிலை கொண்டிருக்கும் மேகக் கூட்டங்கள் தொடர்ந்து அதே இடத்தில் இருக்கும். இதனால் தொடர்ந்து மழை பெய்யும்.

 

வட தமிழகத்தில் நல்ல மழை பெய்து வரும் இந்நேரத்தில் மேற்கு வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பொழிவு இருக்கிறது. நேற்று தென் மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்தது. 

சென்னையைப் பொறுத்தவரை 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான், பகலில் இவ்வளவு மழை பெய்துள்ளது. இந்த மழை பொழிவு தொடரும்” என்று தகவல் தெரிவித்துள்ளார். மழை பொழிவால், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.