காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 1ம் தேதி தொடங்கிய அத்திவரதர் வைபவம், வரும் ஆகஸ்ட் 17ம் தேதிவரை நடைபெறுகிறது. அத்திவரதர் ஜூலை 31ம் தேதிவரை சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 17ம் தேதிவரை நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 29 நாட்களில் சுமார் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.

அத்திவரதரை தரிசிக்க, வேலூர் மார்க்கமாக வரும் பக்தர்களுக்கு ஒலிமுகமதுபேட்டையில் தற்காலிக பஸ் நிலையம், உத்திரமேரூர், வந்தவாசி மார்க்கமாக வரும் பஸ் களுக்கு ஓரிக்கை பகுதியில் தற்காலிக பஸ் நிலையம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பஸ் களுக்கு பழைய பஸ் நிலையத்திலேயே பஸ்கள் நிறுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பக்தர்கள் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் பெரும்பாலானோர், ஆட்டோ, ஷேர் ஆட்டோ உள்பட பல்வேறு வாகனங்களில் பணம் கொடுத்து பயணம் செய்கின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஆட்டோக்களில் 10 முதல் 15 பேர் வரை ஏற்றி செல்கின்றனர். இதுபோல் வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு தலா ₹50 முதல் ₹100 வரை வசூலிக்கின்றனர்.

காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற ஏகாம்பரநாதர் கோயில். காமாட்சி அம்மன் கோயில் உள்பட பல கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய விரும்புகின்றனர். இதனால் ஆட்டோக்களையே நாடுவதால் ஏற்கனவே ₹ 100 வசூலித்த இடங்களுக்குச் செல்ல ₹ 200 கட்டணமாக வசூலிக்கின்றனர். இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சின்ன காஞ்சிபுரம் செல்ல ₹10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது ₹20 வசூலிக்கப்படுகிறது. இதனால் வழக்கமாக வேலைக்கு செல்லும் உள்ளூர் மக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், அத்திவரதர் வைபவத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் கட்டணம் இருமடங்காகி உள்ளது. வெளியூர் பக்தர்கள் தங்கும் வகையில் 24 மணிநேர அறையின் வாடகை 12 மணிநேரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகமாக வருவதால் அனைவருக்கும் விடுதிகளில் அறை கிடைக்க வேண்டும் என்பதால், இதுபோல் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் விடுதிகளின் வசதிக்கேற்ப ஒவ்வொரு விடுதிக்கும் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வரையறுக்கப்பட்டுள்ளது. அதைவிட கூடுதலாக வசூலிக்கக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு விடுதிகளில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

விடுதியில் அறை கேட்டு செல்லும் பக்தர்களிடம், அறை நிரம்பிவிட்டதாக கூறி பின்னர் அதிகக் கட்டணத்தில் அறைகளை வாடகைக்கு விடுவதாக புகார் எழுந்துள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.