தனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கூறினால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

தண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகளை மூடக்கூடாது. அதுபோன்ற சம்பவம் நடந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதை பள்ளி நிர்வாகம் உறுதி  செய்த பின்னரே அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

சில பள்ளிகள் தண்ணீர் பிரச்சனை காரணமாக மூடப்படுவதாக தகவல் வெளியாகிறது. இது முரணான தகவல். பள்ளிகள் மூடப்படுகிறதா என்பதை கண்காணிக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். தனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு என கூறினால், அந்த பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பள்ளியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும். குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி இல்லாத தனியார் பள்ளிகளின் தடையின்மை சான்று ரத்து செய்யப்படும்.

அரசு பள்ளிகளில் எந்த கட்டணமும் வாங்காமல் அனைத்து வசதிகளையும் செய்யும் நிலையில்,  தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்ய முடியும் என கூறினார்.