அபுதாபியில் இருந்து சென்னை திரும்பிய வாலிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக செய்திகள் பரவி வருகின்றன. 

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வணிக வளாகங்கள், திருமண நிகழ்ச்சிகளிலும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், சென்னை மாதவரம் அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் விஜயசங்கரன் (36). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு பணிக்காக அபுதாபி சென்று பணிபுரிந்து வந்தார். பணி முடிந்து கடந்த 9-ம் தேதி வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்த மறுநாள் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து வந்த விஜயசங்கரன் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது. இதையடுத்து சுகாதாரத்துறை உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் உயிரிழந்த விஜயசங்கரன் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதும், சர்க்கரை வியாதி அதிகமானதால் அவர் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.