தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் அதிகரித்து வருகிறது. தினமும் 500 நபர்களுக்கு குறையாமல் கொரோனா பாதிப்பு உறுதியாகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாகவே தினமும் பாதிப்பு எண்ணிக்கைகள் அதிக அளவில் தெரிய வருவதாக அரசு தெரிவித்திருக்கிறது. பாதிப்புகள் உயர்ந்து வருவதால் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நேற்று வெளியிட்ட அறிவிப்பில் 536 புதிய பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,740 ஆக உயர்ந்திருக்கிறது.

தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. அங்கு நேற்று மட்டும் 364 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு மொத்தமாக 7,117 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனிடையே சென்னையில் ஆவின் பால் பூத் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த 48 வயது நபர் ஒருவர் அங்கிருக்கும் ஆவின் பால் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வரவே மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனைகள் நடந்து வருகிறது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த பலருக்கும் பரிசோதனை நடத்த சுகாதாரத் துறையினர் முடிவு செய்திருக்கின்றனர் .பால் வாங்க வந்த வாடிக்கையாளர் மூலமாகவே அவருக்கு தொற்றுப் ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. ஆவின் பால் பூத் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்களுக்கும் தொற்று பரவி இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்துள்ளது.