பிரதமர் மோடியை  விமர்சிப்பவர்களை “தேச விரோதிகள்”என்று திசைதிருப்புவது முட்டாள்தனம் என்றும், இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை கண்டித்தும்  தமிழக ஆம் ஆத்மி கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்  பிரிட்டிஷ ஆட்சியில் கூட கருத்து சுதந்திரம் இருந்தது ஆனால் மோடியின் ஆட்சியில் அதுவும் இல்லை என்று கடுமையாக சாடியுள்ளது. அதன் விவரம்:-

இந்தியாவில் நடக்கும் வன்முறைகளை கண்டித்தும், இதில் பிரதமர் நரேந்திரமோடி தலையிடக்கோரியும் திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூகவியலாளர், சமூக சேவகர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்பட முக்கிய பிரபலங்கள் நரேந்திரமோடிக்கு சமீபத்தில் கடிதம் எழுதினார்கள். அந்த கடிதத்தில் இந்தியாவின் பல மாநிலங்களில் ஒரு சாரார் மீது கும்பல் வன்முறை நடத்தப்படுகின்றன. அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதாபிமான அடிப்படையில் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த கடித விவகாரம் தொடர்பாக பீகார் போலீசார் இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தது. இது பிரபலங்களை பொது பிரச்சனைகள் பற்றி பேச விடாமல் தடுப்பதோடு அச்சுறுத்தும் செயலாகும். இதனையடுத்து திரை பிரபலங்களும், அரசியில் தலைவர்களும் தங்களது கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். பிரதமரை விமர்சிப்பவர்களை “தேச விரோதிகள்” என்று கருதுவது மிகபெரும் முட்டாள்தனம், இவர்கள் செய்தது விமர்சனம் கூட இல்லை பிரதமர் மோடிக்கு நேரடியாக கடிதம் மூலம் வைக்கப்பட்ட கோரிக்கையே.

கடிதத்தில் உங்களுடனோ அல்லது உங்கள் அரசாங்கத்துடனோ கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் கூட கருத்துச் சுதந்திரத்தை நிலை நிறுத்துவதற்கான உறுதி அளிக்க வேண்டும். பிரிட்டிஷ் அரசின் மேல் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் கூட பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை தைரியமாக விமர்சித்தார்கள் பிரிட்டிஷாரும் விமர்சிக்க அனுமதித்தார்கள். பிரிட்டிஷார் கொடுத்த உரிமையை கூட மோடி அரசு தர மறுப்பதேன்.பிகார் போலிசாரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்திற்கு விரோதமானது மத்திய அரசு உடனே தலையிட்டு 49 பிரபலங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற செய்ய வேண்டும் என தமிழக ஆம்ஆத்மிகட்சி சார்பாக மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.