தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சீராக அதிகரித்துவருகிறது. கடந்த இரண்டு வாரமாக பாதிப்பு எண்ணிக்கை கொஞ்சம் கூட குறையவில்லை. தினமும் 700க்கும் அதிகமான பாதிப்பு உறுதியாகிவந்த நிலையில், இன்றுடன் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 800க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. 

நேற்று 817 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று அதிகபட்சமாக 827 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினமும் சராசரியாக 12 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவரும் நிலையில், இன்றும் 12,246 பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் 827 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 19,372ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக  4,55,214 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருகின்றனர்.

இன்று ஒரேநாளில் 639 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். எனவே குணமடைந்தோர் எண்ணிக்கை 10,548ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 55%ஆக உள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19,372 பேரில் 10,548 பேர் குணமடைந்துவிட்டனர்.

தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் 0.7% என்ற அளவிலேயே நீடித்துவருகிறது. இன்று பாதிப்பு உறுதியான 827 பேரில் 559 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இந்த 827 பேரில் 117 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். இதுவரை, மகாராஷ்டிராவில் இருந்து வந்த 936 பேருக்கும் குஜராத்தில் இருந்து வந்த 27 பேருக்கும், டெல்லியில் இருந்துவந்த 17 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த 26 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. ராஜஸ்தான் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.