தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பாதிப்பு எண்ணிக்கை சீரான வேகத்தில் உயர்ந்த வண்ணம் உள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் 700க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகிவருகிறது.

தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதனால் அதிகமான பாசிட்டிவ் கேஸ்கள் கண்டறியப்படுகின்றன. இன்று ஒரே நாளில் 11,835 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 805 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக அதிகரித்துள்ளது. இதுதான்(805) ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு. இதற்கு முன் மே 11ம் தேதி பதிவான 798 தான் ஒருநாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு. இந்நிலையில், அந்த எண்ணிக்கையை முறியடித்து இன்று அதிகபட்சமாக 805 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று கொரோனா பாதிப்பு உறுதியானதில் 712 பேர் தமிழ்நாட்டிலேயே இருந்தவர்கள். 93 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 4 லட்சத்து 21ஆயிரத்து 480 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்று சென்னையில் மட்டும்  549 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சீரான வேகத்தில் அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். இன்று ஒரே நாளில் 407 பேர் குணமடைந்ததையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 8731ஆக அதிகரித்துள்ளது. இன்று 7 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 118ஆக அதிகரித்துள்ளது.