தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களாக தொடர்ச்சியாக பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்து கொண்டிருக்கிறது. மே 4லிருந்து இன்று வரை(இடையில் 3 நாட்களை தவிர) தொடர்ச்சியாக தினமும் 500க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகிறது. 

இன்றுடன் மூன்றாவது நாளாக, 700க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று 776 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 786 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று 12,046 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 786 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 14,753ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் தினமும் சராசரியாக 12 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுவதால் தான் பாதிப்பும் அதிகமாக இருக்கிறது. ஆனால் பாதிப்பு அதிகமாக இருக்கும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருகின்றனர். 

இன்று ஒரே நாளில் 846 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே குணமடைந்தோர் எண்ணிக்கை 7128ஆக அதிகரித்துள்ளது. இன்று 4 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 98ஆக உயர்ந்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 569 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9364ஆக அதிகரித்துள்ளது. 

37 நாட்களாக கொரோனா இல்லாத மாவட்டமாக பச்சை மண்டலத்தில் இருந்த ஈரோட்டில் இன்று ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஈரோட்டில் 70 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டிருந்ததில், 69 பேர் குணமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்ட ஈரோடு மாவட்டத்தில் 37 நாட்களுக்கு பிறகு இன்று அந்த மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.