தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. 

மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. அந்தவகையில், தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தினமும் சராசரியாக 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

இன்று 12,468 பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், 776 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று 743 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று 776 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 13967ஆக உயர்ந்துள்ளது. 14 ஆயிரத்துக்கு வெறும் 33 தான் குறைவு. 

இன்று சென்னையில் மட்டும் 567 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் பாதிப்பு 8795ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகரிக்கும் அதேவேளையில் அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். அந்தவகையில், நேற்று அதிகபட்சமாக 987 பேர் டிஸ்சார்ஜ் ஆனநிலையில், இன்று 400 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே குணமடைந்தோரின் எண்ணிக்கை 6282ஆக உயர்ந்துள்ளது. இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில், தமிழ்நாட்டில் மொத்தம் 3 லட்சத்து 72 ஆயிரத்து 532 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுதான் இந்தியாவிலேயே அதிகம். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமானோர் திரும்பிவரும் நிலையில், அவர்களில் சிலருக்கு தொற்று உறுதியாகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பரிசோதனை எண்ணிக்கையில், சமரசம் செய்துகொள்ளாமல், பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக பரிசோதனையை குறைக்காமல், தொடர்ந்து அதிக பரிசோதனை செய்துவருகிறது. அதனால்தான் அதிகமான பாதிப்பு கண்டறியப்படுகிறது.