தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சீரான வேகத்தில் அதிகரித்துவருகிறது. இன்றுடன் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக 700க்கும் அதிகமான பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் தினமும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுவதால் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த, அதிகமான பாதிப்புகளை கண்டறிவது அவசியம். அதை தமிழக அரசு சிறப்பாக செய்துவருகிறது.

நேற்று 759 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 765 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 16277ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 587 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 10576ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் அதிகபட்சமாக 4 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதனால் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. 

பாதிப்பு அதிகரிக்கும் அதேவேளையில், குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துவருகிறது. இன்று ஒரே நாளில் 833 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 8324 பேர் குணமடைந்துள்ளனர். 7839 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று 8 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ளது.