தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மே 4ம் தேதியிலிருந்து(14, 15, 16 தவிர) இன்று வரை தொடர்ச்சியாக தினமும் 500க்கும் அதிகமான பாதிப்பு உறுதியாகிவருகிறது.

தமிழ்நாட்டில் இன்று 743 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 13191ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 557 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு 8228ஆக உயர்ந்துள்ளது. 

இன்று 3 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு 87ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு இன்று அதிகபட்சமாக 987 பேர் குணமடைந்து வீடு திரும்பியுளனர். எனவே இதுவரை மொத்தம் 5882 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 7219 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகரித்தாலும் கூட, உயிரிழப்பு குறைவாகவும் அதிகமானோர் குணமடைவதும் ஆறுதலளிக்கும் விஷயங்களாக உள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இதுவரை வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 987 பேரை குணப்படுத்தி சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு.