இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் 738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரையில் தமிழகத்தில் 21 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வீடு திரும்பி இருப்பதாக சுகராதரத்துறை அறிவித்திருக்கிறது. அவர்களில் மகிழ்ச்சித் தரக் கூடிய செய்தியாக 74 வயது மூதாட்டி ஒருவரும் குணமடைந்துள்ளார். பொழிச்சலூரைச்  சேர்ந்த அவர் கடந்த மாதம் 26ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதை அடுத்து தனிமை சிகிச்சையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார்.

உயர் ரத்த அழுத்தமும் கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயும் அவருக்கு இருந்ததால் கொரோனா பாதிப்பு அதிகம் உருவாகி இருந்தது. இந்த நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் மெல்லமெல்ல குணமடைந்த அவர் தற்போது கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு உள்ளார். இதையடுத்து நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவரை ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர் ஆர்.ஜெயந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் நாராயணசாமி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து பழக்கூடை கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். அது தொடர்பான புகைப்படத்தையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்திருக்கும் மூதாட்டி ஒருவர் குறித்த செய்தி மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.