தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பாதிப்பு எண்ணிக்கை சீரான வேகத்தில் உயர்ந்த வண்ணம் உள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் 700க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்த நிலையில், இன்று பரிசோதனை எண்ணிக்கை குறைந்ததால், பாதிப்பும் 700ஐ எட்டவில்லை.

தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை விட அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் தொடர்ந்து தினமும் சராசரியாக 12 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவந்த நிலையில், இன்று, 10 ஆயிரத்துக்கும் குறைவான பரிசோதனைகளே செய்யப்பட்ட நிலையில் இன்று 646 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 17,728ஆக அதிகரித்துள்ளது. 

இன்று சென்னையில் 509 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சீரான வேகத்தில் அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். 

இன்று ஒரே நாளில் 611 பேர் குணமடைந்ததையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 9342ஆக அதிகரித்துள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 127ஆக அதிகரித்துள்ளது. 8256 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.