தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு, தினமும் 500க்கு அதிகமாக பதிவான கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக 500க்கு குறைவாக இருந்தது. அதனால் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் வந்திருந்தது. 

இந்நிலையில், இன்று மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இன்று 12,445 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 639 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 11,224ஆக உயர்ந்துள்ளது. 

இந்த 639 பேரில் 558 பேர் தமிழ்நாட்டிலேயே இருந்தவர்கள். எஞ்சிய 81 பேர் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பியவர்களில். அதில் அதிகபட்சமாக 73 பேர் மகாராஷ்டிராவில் இருந்தும் 3 பேர் தெலுங்கானாவில் இருந்தும், தலா இருவர் கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். ஆந்திராவிலிருந்து வந்த ஒருவர் உட்பட மொத்தம் 81 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 

இன்று சென்னையில் மட்டும் 480 பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 6780ஆக அதிகரித்துள்ளது. இன்று 634 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே குணமடைந்தோர் எண்ணிக்கை 4172ஆக உயர்ந்துள்ளது. மேலும் நான்கு பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு 78ஆக அதிகரித்துள்ளது.  6971 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக குறைவான பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் பலருக்கு தொற்று உறுதியாவதால் பாதிப்பு எண்ணிக்கை, கடந்த 3 நாட்களை விட இன்று அதிகமாக உள்ளது.