கணவனின் முதல் மனைவியின் குழந்தை என்பதால் சொந்த சித்தியே 6 வயது சிறுமியை மாடியில் இருந்து வீசி கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் சக்கரபாணி தெருவை சேர்ந்த பார்த்திபன் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு முதல் திருமணத்தில் ராகவி என்ற 6 வயது மகள் உள்ளார். முதல் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விடவே சூர்யகலா என்ற பெண்ணை பார்த்திபன் 2-வது திருமணம் செய்து கொண்டார். 

சூரியகலாவிற்கும் பார்த்திபனுக்கும் இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. முதல் மனைவி மூலமாக பார்த்திபனுக்கு பிறந்த ராகவி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 2-வது திருமணமானதில் இருந்தே ராகவி மீது கோபமும், வெறுப்பும் கொண்ட சூரியகலா மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதேசமயம் சிறுமி ராகவி தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். நேற்று பாட்டி வெளியூருக்கு சென்றிருந்த நிலையில் ராகவி தனது சித்தியுடன் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், ராகவியை நீண்ட நேரமாக காணவில்லை என்று கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பதற்றத்துடன் வந்த கணவர் பார்த்திபன் அப்பகுதி முழுவதும் ராகவியை தேடியுள்ளார். அப்போது வீட்டின் 3-வது மாடியில் இருந்து பார்த்தபோது வீட்டின் பின்புறம் ராகவி சடலமாக கிடந்ததை பார்த்து பார்த்திபன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முதலில் சிறுமி மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது விழுந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், மாடியில் இருந்து குழந்தை கீழே விழுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. 

இந்நிலையில், சூரியகலா சிறுமி ராகவிடம் கடிமையாக நடந்து கொண்டது தொடர்பாக போலீசாரிடம் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சூரியகலாவிடம் போலீசார் கிடுக்கிடுப்பிடி விசாரணை நடத்தினர். அதில், தனது கணவனின் முதல் மனைவி குழந்தையான ராகவி மீது இருந்த வெறுப்பு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனியாக இருந்த சிறுமியின் தலையில் டைல்ஸ் கல்லால் அடித்ததாகவும், சிறுமி மயக்கமடைந்ததும் தூக்கிச் சென்று மூன்றாவது மாடியில் இருந்து வீட்டின் பின்புறம் உள்ள புதரில் வீசி எரிந்ததாகவும் பகீர் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சூர்யகலாவை போலீசார் கைது செய்தனர்.