தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால் தேங்கியுள்ள அரசு பணிகளை முடிக்க இனி வாரத்தில் 6 நாட்கள் வேலைநாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்கள் வழக்கமாக வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கி வந்தன. கொரோனா காரணமாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது மற்றும் சில காரணங்களால் அரசு பணிகள் தொடர்ந்து முடக்கம் கண்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு அரசு அலுவலங்களில் இனி 6 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- நிலுவையில் உள்ள கோப்புகளுக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து அரசு அலுவலங்களுக்கும் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அரசு பணியாளர்கள் அலுவலகங்களுக்குள் வந்திருக்க வேண்டும். அரசு பணியாளர்கள் வருவதை அறிக்கை தயார் செய்து தினமும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும், கொரோனா காரணமாக 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.