தமிழ்நாட்டில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 5849 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,86,492ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முனைப்பில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 60,112 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 5849 பேருக்கு கொரோனா தொற்று உறுதியனாது. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,86,492ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் 1171 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 88,561ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு தாறுமாறாக அதிகரித்துவருவது வருத்தம் அளிக்கிறது. 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். அந்தவகையில் இன்று 4910 பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 131583ஆக அதிகரித்துள்ளது. 

இன்று 74 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே, மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து மருத்துவமனைகளில் இறந்த அனைவரது ரிப்போர்ட்டையும் ஆய்வு செய்ததில், கொரோனாவால் உயிரிழந்த 444 பேர் உயிரிழப்புகள் விடுபட்டதாகவும், அதையும் சேர்த்து இதுவரை மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3144ஆக அதிகரித்துள்ளது.