இது குடும்ப விழா... மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் செய்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இது தன் குடும்ப விழா என பேசி புதுமணத் தம்பதிகளை நெகிழ வைத்தார்.
சென்னை கோபாலபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின், பரிசுகளை கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வில் எம்.பி. கனிமொழியும் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது : “உங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் என பெயர் சூட்டி கண்ணியத்தை கொடுத்தவர் கலைஞர்தான். அந்த வகையில் நமக்கு பெயர் சூட்டிய தந்தை கலைஞர்தான், அதனால் இது குடும்ப விழா.
கலைஞர் தலைமையில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைந்தபோது மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வகையான கருவிகள், 36 மாதிரிகளில் 7219 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. நகரப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவரோடு கட்டணமில்லாமல் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்... ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது- பாஜகவை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலின்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 2021-2022 நிதியாண்டில் 813 கோடியே 65 லட்சம் ரூபாயும், 2022 - 2023 நிதியாண்டில் 838 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் அவர்களுக்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நான் விரிவாக எடுத்துரைத்தேன்.
இவை அனைத்தும் உங்களுக்கான சலுகைகள் என நினைத்துவிட வேண்டாம். இவற்றை தரவேண்டியது என்னுடைய கடமை. மாற்றுத்திறனாளிகளின் மற்ற கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றித்தர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதையும் படியுங்கள்... திமுக அரசை திடீரென பாராட்டிய டி.டி.வி தினகரன்.. என்ன காரணம் தெரியுமா?